KTS 5.0 நிகழ்ச்சித் திட்டம்
விரிவான திட்ட அறிக்கையின்படி காசி தமிழ்ச் சங்கமம் 5.0-க்காக CICT செயல்படுத்துபவை.
I கல்விசார் அறிமுக மற்றும் பயிற்சித் திட்டம்
தனித்த இணையதளம்
இந்த இணையதளம்: திட்ட நிர்வாகம், பங்கேற்பாளர் பதிவு, உள்ளடக்க வழங்கல், பங்கேற்கும் நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு ஆகிய அனைத்திற்கும் ஒரே இடம். பதிவு மற்றும் தெரிவு அமைப்பு, இணையவழித் தேர்வுடன் கூடிய விண்ணப்பதாரர் தளம், மின்னிலக்கக் களஞ்சியம், பங்கேற்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இதில் அடங்கும்.
மின்னிலக்க வளங்களும் துணைப் பொருள்களும்
கற்றல் பொருள்களும் ஆய்வு வளங்களும் அடங்கிய, அனைவரும் முழுமையாக அணுகத்தக்க களஞ்சியம்: இந்திய மொழிகளிலும் அயல்நாட்டு மொழிகளிலும் திருக்குறள், ஆய்வு வெளியீடுகள், திருக்குறள் பன்மொழிச் செயலி, திருக்குறள் ஓலைச்சுவடி மூலப் பிரதிக் கொத்து, தொடர்புடைய இணையதளங்கள்.
மின்னிலக்கக் களஞ்சியம் 22 மொழிகளில் திருக்குறள்நாடு தழுவிய விளம்பரமும் மாணவர் பதிவும்
கல்வி நிறுவனங்கள், மின்னிலக்க ஊடகங்கள், பங்கேற்புப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் வழியாக இந்தியா முழுவதும் நடைபெறும் பரப்புரை, 1,000 கல்லூரிகளிலிருந்து 1,000 மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பங்கள் இந்த இணையதளத்திலேயே பெறப்பட்டுப் பரிசீலிக்கப்படுகின்றன.
- பதிவுக் காலம்: 25-09-2026 – 15-11-2026
- தகுதி: இந்தியாவிலுள்ள எந்தக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்திலும் தற்போது பயிலும் மாணவர்கள்
- ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் ஒரு பிரதிநிதி
தேர்வும் தெரிவும்
திருக்குறள் குறித்து விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள புரிதலை அளவிடும், பாதுகாப்பான, தரப்படுத்தப்பட்ட இணையவழி மதிப்பீடு; ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தேர்ந்த மொழியில் இது நடத்தப்படும். முடிவுகளின் அடிப்படையில், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் ஒருவர் என, 1,000 மாணவப் பிரதிநிதிகளின் தகுதிப் பட்டியல் உருவாக்கப்படும்.
- 29-11-2026, 11:00–12:00 IST · 30 நிமிடங்கள்
- 25 பல்தேர்வு வினாக்கள் · 4 மதிப்பெண்கள் வீதம் · எதிர்மறை மதிப்பெண் இல்லை
21 மொழிகளில் இணையவழி அறிமுகப் பயிற்சி
திருக்குறள் குறித்த, பத்துப் பகுதிகள் கொண்ட கல்விசார் காணொளி உரைத் தொடர்; தமிழ் அல்லாத 21 அட்டவணை மொழிகளில் மொழிபெயர்ப்பு, மொழிமாற்றம் அல்லது துணைத்தலைப்புகளுடன் மொழிவாரியாக வழங்கப்படும்; ஒவ்வொரு அமர்விலும் 20 நிமிட நேரடிக் கேள்வி-பதில் பகுதி இடம்பெறும்.
அறிமுகப் பயிற்சிஒரு மாதப் பயிற்சி
தேர்வு செய்யப்படும் 1,000 மாணவர்களும் ஒரு மாதப் பயிற்சியை மேற்கொள்வர்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். திருக்குறள், அதன் விழுமியங்கள், அதன் மெய்யியல், அதன் இன்றைய பொருத்தப்பாடு ஆகியவை குறித்த அவர்களின் புரிதலை ஆழப்படுத்துவதே இதன் நோக்கம்.
மாணவர் உரையும் அறிவுப் பரவலும்
ஒவ்வொரு பிரதிநிதியும், நியமிக்கப்பட்ட வழிகாட்டும் ஆசிரியரின் வழிகாட்டுதலுடன், தம் கல்லூரியில் திருக்குறள் குறித்து ஒரு மணி நேர உரையை அல்லது சொற்பொழிவை நிகழ்த்துவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்; இதனால் 1,000 கல்லூரிகளில் ஒவ்வொன்றும் தன் மாணவர் ஒருவரிடமிருந்தே குறள்களைக் கேட்கும்.
II செயலிகள், காணொளிகள், திரைப்படங்கள், மாநாடுகள், பொது இடங்களில் காட்சிப்படுத்தல்
திருக்குறள் பன்மொழிச் செயலி
22 அட்டவணை மொழிகளில் CICT-இன் மொழிபெயர்ப்புகள், இரண்டு தமிழ் உரைகள், ஆங்கில உரைநடை, சொல்வாரி இலக்கணக் குறிப்பு, யாப்பு அலகிடுதல், ஓலைச்சுவடிச் சான்றுகள் ஆகியவற்றுடன் 1,330 குறள்களும் உள்ளன. இது இணைய இணைப்பின்றி இயங்கும்; விளம்பரங்கள் இல்லை; CC BY 4.0 உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
கல்விசார் காணொளித் தொடர்
தேர்ந்தெடுத்த குறள்களின் பொருள், விழுமியங்கள், பொருத்தப்பாடு ஆகியவற்றை விளக்கும், இந்திய மொழிகளிலான இருபது நிமிட உரைகள்; CICT-இன் YouTube அலைவரிசைகளிலும் இந்த இணையதளத்திலும் வெளியிடப்படும்.
திருக்குறள் ஒலிநூல்கள்
பொருள், விளக்கம், பல மொழிகளிலான மொழிபெயர்ப்பு ஆகியவற்றுடன் கூடிய குறள் ஓதல் ஒலிப்பதிவுகள்; பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள், கேட்டுக் கற்போர், தமிழ் அறியாதோர் ஆகியோருக்காக வடிவமைக்கப்பட்டவை.
திருக்குறள் ஓதல் செயலி
டாக்டர் மு. வரதராசனாரின் தமிழ் உரையுடன், நூல் முழுவதையும் குறள் குறளாக ஓதுதல்; சரியான ஒலிப்புக்கும் முப்பாலையும் பயில்வதற்கும் உதவும்.
குறும்படங்கள்
அறநெறித் தலைமை, சமூக நல்லிணக்கம், வாய்மை, செய்ந்நன்றி அறிதல், குடிமைக் கடமை ஆகியவை குறித்த, தேர்ந்தெடுத்த குறள்களை நாடக வடிவில் காட்டும் பதினைந்து நிமிடப் படங்கள்; KTS நிகழ்விடங்களிலும் கல்லூரிகளிலும் ஒளிபரப்பு நிறுவனங்களின் வழியாகவும் திரையிடப்படும்.
ரீல்களும் குறுங்காணொளிகளும்
தனித்தனிக் குறள்கள் குறித்து, செயற்கை நுண்ணறிவின் துணையுடன் உருவாக்கப்படும், அறுபது முதல் தொண்ணூறு நொடிகள் வரையிலான அசைவூட்டக் காணொளிகள்; பன்மொழித் துணைத்தலைப்புகளுடன் CICT-இன் சமூக ஊடகத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும்.
திருக்குறள் குறித்த தேசிய ஆண்டு மாநாடு
பாரதிய பாஷா சமிதி, பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து பெருநகரங்களில் நடத்தப்படும்; ஒவ்வொரு மொழிப் பகுதியையும் சேர்ந்த அறிஞர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் ஒன்றிணைக்கும்.
பொது இடங்களில் காட்சிப்படுத்தல்
இந்திய இரயில்வே, இந்திய விமான நிலையங்கள் ஆணையம், இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், தொடர்வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகள் ஆகியவற்றிலுள்ள பயணியர் தகவல் அமைப்புகளிலும் அறிவிப்புப் பலகைகளிலும் மொழிபெயர்ப்புடன் குறள்கள் காட்சிப்படுத்தப்படும்.
படக்கதை நூல்கள்
திருக்குறளை அடியொற்றிய, சிறுவர்களுக்கான படக்கதைகள்; முதலில் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளிவரும்; பள்ளிக் கல்வி வாரியங்களின் வழியாக வழங்கப்படும்; இந்த இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கலாம்.
சுவரொட்டிகளும் விளக்கப்படங்களும்
பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் ஆகியவற்றுக்கான, அச்சிடுவதற்கு ஆயத்தமான பன்மொழிச் சுவரொட்டிகள்; CBSE, KVS, JNV, மாநிலப் பள்ளி அமைப்புகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும்; பதிவிறக்கவும் இயலும்.
III தமிழ் பேசாத மாணவர்களைச் சென்றடைதல்
நாள்தோறும் ஒரு குறள்
200 பள்ளி நாள்களுக்கான குறள் நாட்காட்டி; ஒவ்வொரு காலைக் கூட்டத்திற்கும் ஒரு குறள், பள்ளியின் மொழியில் மொழிபெயர்ப்புடனும் பொருளுடனும்; அச்சிட்ட புரட்டு விளக்கப்படங்களாகவும் மின்னிலக்கத் தொகுப்புகளாகவும் வழங்கப்படும்.
நாள்தோறும் ஒரு குறள்கதை சொல்லல்
கதை, சொற்பொழிவு, குறுநாடகம், நாடகம், நாட்டிய நாடகம் ஆகியவற்றின் வழியாக மாணவர்கள் திருக்குறளின் விழுமியங்களை எடுத்துரைப்பதற்கு உதவும் எழுத்துப் பிரதித் தொகுப்புகள், கதை சொல்லல் வழிகாட்டிகள், அரங்க ஆக்கக் குறிப்புகள்.
திருக்குறள் விளையாட்டுச் செயலி
குறுக்கெழுத்து, புதிர்கள், அடியை நிறைவு செய்தல், நினைவாற்றல் இணைகள், சொல் ஊகித்தல், தட்டச்சுப் போட்டிகள்; பன்மொழி இடைமுகங்களுடன், தொடக்கநிலை முதல் அறிஞர் நிலை வரை.



